குட் நியூஸ்..! விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படும் - மத்திய ரயில்வே இணையமைச்சர்..!

சென்னை ஐசிஎஃப் ரயில் தொழிற்சாலைக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா நேற்று வருகை தந்தார். அங்கு ஆய்வு மேற்கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறியதாவது, "ரயில் கட்டண உயர்வை ஜூலை 1 முதல் அமல்படுத்துவது பற்றி மத்திய ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய ரயில்வே அமைச்சரும் கலந்தாலோசித்து முடிவு செய்வார்கள். விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும்.
ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்:
அதேபோல, வந்தே பாரத் ரயில்களிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படும். சென்னை ஐசிஎப் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் டயர் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறது. மேலும், இரண்டாம் டயர் படுக்கை வசதிக் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் வரும் ஆகஸ்ட் மாதமும், மூன்றாவது டயர் படுக்கை வசதிக்கொண்ட வந்தே பாரத் ரயில்கள், வரும் செப்டம்பர் மாதமும் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
மின்சார ரயில்களில் மாற்றம்:
அதேபோல, மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகள் உள்ள ரயில் பெட்டிகள் நடப்பாண்டு டிசம்பர் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மேலும், இந்தியாவிலே முதன்முறையாக ஹைட்ரஜன் ரயில் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருக்கின்றன.
இதன் சோதனை ஓட்டம், நடப்பாண்டு இறுதியில் ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் நடைபெறவுள்ளது. மேலும், மணிக்கு 280 கி.மீ.வேகத்தில் செல்லும் அதிவேக ரயிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது, 2027 ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்படும். இந்த ரயில்களை சென்னை ஐசிஎப் நிறுவனம், பிஇஎம்எல் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது.
சென்னை ஐசிஎப் ஆலை 2025-2026ம் நிதியாண்டில், இதுவரை இல்லாத வகையில் 4,356 ரயில் பெட்டிகளை தயாரித்து, புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆலையில் வந்தே பாரத் பெட்டிகள், எல்எச்பி எனும் நவீன பெட்டிகள், ஏசி மின்சார ரயில் பெட்டிகள், மெமு ரயில் பெட்டிகள் என 72,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளன" என்றும் தெரிவித்தார்.