1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இன்று முதல் நாமக்கலில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும்..!

1

தமிழகத்தில்  சென்னை - கோவை,  சென்னை - பெங்களூரு, சென்னை - நாகா்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன... முக்கிய நகரங்களுக்கு இடையே 55க்கும் அதிகமான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில் கட்டணம் அதிகமாக இருந்தாலும்கூட, வந்தே பாரத் ரயிலையே பயணிகள் விரும்புகிறார்கள். இதற்கு காரணம், நேரம் மிச்சமாவதுடன், நிறைய வசதிகள் ரயிலில் செய்யப்பட்டுள்ளன.. இப்படிப்பட்ட சூழலில், மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருக்கு இன்று (ஜூன் 26) முதல் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான வழித்தடத்தையும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

மதுரையிலிருந்து இன்று அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காலை 7 மணிக்கு திருச்சியை அடைந்து பிறகு 7.12 மணிக்கு புறப்பட்டு கரூர், சேலம் வழியாக மதியம் ஒரு மணிக்கு பெங்களூரை சென்றடையும். அதுபோலவே, மறு மார்க்கத்தில் அதே நாள் மதியம் 1:45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு இரவு 7.35 மணிக்கு வரும் இந்த ரயில், 7.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9:45 மணிக்கு மதுரையை வந்தடையும். மதுரை- பெங்களூருக்கு ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயண நேரமானது 7 மணி நேரமாக இருந்து வருகிறது.. ஆனால், இப்போது வந்தே பாரத் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், வெறும் 6 மணி நேரத்திலேயே சென்றடையலாம்.

இந்த ரயில் மதுரையில் இருந்து வரும்போது காலை 8.32 மணிக்கும் மற்றும் பெங்களூரில் இருந்து வரும்போது பிற்பகல் 5.33 மணிக்கும் நாமக்கல்லை வந்தடைகிறது.நாமக்கல் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது.வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும் என்ற அறிவிப்பானது ஒட்டுமொத்த மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

Trending News

Latest News

You May Like