1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி: துணை முதல்வர் உதயநிதி!

1

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் 450 ஊராட்சிகளுக்கு 564 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பை வழங்கினார். மேலும், முதலமைச்சர் கோப்பை போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி, பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.67.48 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் என்னை தமிழ்நாட்டு துணை முதலமைச்சராக நியமித்த பிறகு, நேற்று சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். சென்னைக்கு வெளியே நான் கலந்து கொள்கின்ற முதல் அரசு நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சி. துணை முதலமைச்சராக நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பாக நான் கலந்து கொள்கின்ற முதல் நிகழ்ச்சியும் இந்த நிகழ்ச்சி தான். இந்த வருடம் பாரிஸில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டில் இருந்து 6 மாற்றுத்திறனாளி வீரர்களை அனுப்பி வைத்தோம். அந்த 6 வீரர்களுக்கும் போட்டிக்கு போவதற்கு முன்பாகவே முதலமைச்சர் அவர்கள் ரூ.7 லட்சம் வழங்கி ஊக்கத் தொகையாக அனுப்பி வைத்தார்கள். சென்ற ஆறு பேரில், நான்கு பேர் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்கள். அந்த 4 பேருக்கும் மொத்தம் ரூபாய் 5 கோடி அளவுக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பரிசுத் தொகையை வழங்கினார். இந்த மூன்று வருடங்கள் மட்டும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கிட்டத்தட்ட 1.300 விளையாட்டு வீரர்களுக்கு ரூபாய் 38 கோடி அளவிற்கு உயரிய ஊக்கத்தொகையை வழங்கி இருக்கிறார்கள்.

அதேபோல், அரசு மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டு இருந்தார்கள். கழக அரசு அமைந்த பிறகு, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் சீரிய நடவடிக்கையின் பேரில் முதல் கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி வழங்க இருக்கிறோம் என்பதை இந்த நேரத்திலே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக Formula 4 இரவு நேர கார் பந்தயத்தை சென்னையில கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். கடந்த ஜனவரி மாதம் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக நாம் நடத்தி காட்டினோம். அந்த கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில் 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் தமிழ்நாடு முதன்முறையாக இண்டாவது இடத்தை தமிழ்நாடு பிடித்தது. விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல. நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய பல்வேறு துறைகளிலும் இன்றைக்கு மகத்தான சாதனைகளை படைத்து வருகின்றது. வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, மகளிர் நலன் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கின்றது என்று நான் சொல்லவில்லை. ஒன்றிய அரசினுடைய நிதி ஆயோக் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்ல, நேற்றைய தினம் ஒரு செய்தி வந்தது. ஒன்றிய அரசினுடைய புள்ளியியல் துறை (Statistics Department) ஒரு புள்ளிவிவரம் கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான் என்றும், இந்தியாவிலேயே அதிக அளவிலான வேலைவாய்ப்பினை தரக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்று அந்த புள்ளியியல் துறை தெரிவிக்கின்றது. இப்படி எல்லா துறைகளிலும் தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டி கொண்டிருக்கிறது என்பதை இங்கே நான் பெருமையோடு தெரிவித்துக்கொள்கின்றேன். இன்றைக்கு கிராமப்புறங்களிலிருந்து நிறைய விளையாட்டுத் துறை திறமையாளர்கள் வர வேண்டும் என்ற அந்த அடிப்படையில் தான் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம்.

முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் எத்தனையோ திட்டங்கள் இருக்கின்றன. இருந்தாலும் விளையாட்டுத் துறையின் சார்பாக முதல் முறையாக கலைஞர் பெயரில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றால், அது இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் மட்டும் தான். நீங்க யோசிக்கலாம். இந்த திட்டத்திற்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் என்று ஏன் பெயர் வைத்தார்கள் என்றால், ஒரு விளையாட்டு வீரனுக்கு இருக்கக் கூடிய அத்தனை குணங்களும், திறமைகளும் கலைஞரிடம் இருந்தது. அவரு ஒரு ஆல் ரவுண்டர். அதனால் தான் இந்த திட்டத்துக்கு அவரோட பெயரை சூட்டினோம். எப்போதும் யாராலயும் வீழ்த்த முடியாத ஒரு அரசியல் வீரனாக கலைஞர் அவர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் திகழ்ந்தார். எனவே கலைஞர் பெயரால் இந்த விளையாட்டு உபகரணங்கள் இன்று வழங்கப்படுகின்றன. இவற்றை பெறக்கூடிய விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் கலைஞர் அவர்களுக்கு இருந்த அத்தனை குணங்களையும், திறமைகளையும் நீங்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like