குட் நியூஸ்..! இந்த பொருட்களுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அறிவித்தார் டிரம்ப்..!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மற்ற நாடுகள் தங்களுடைய பொருட்களுக்கு விதிக்கும் வரிக்கு நிகராக பரஸ்பரம் அதே அளவுக்கு வரி விதிப்போம் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பல நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விகிதத்தையும் அவர் வெளியிட்டார். சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கான இந்த பரஸ்பர வரியை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக சமீபத்தில் அவர் அறிவித்தார். அதே நேரத்தில் சீனா மீது, 145 சதவீத வரியை விதித்தார்.
இந்நிலையில், பரஸ்பர வரி விதிப்பிலிருந்து ஸ்மார்ட்போன்கள், கணினி உள்ளிட்ட சில குறிப்பிட்ட மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளித்து, அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிவிப்பில் இதுவரை 20பொருட்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன.
இவற்றில் செமி கண்டக்டர் அடிப்படையிலான மின்னணு கருவிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அடிப்படை வரியான, 10 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படும் என, கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான மின்னணு சாதனங்கள், உதிரி பாகங்களுக்கு இது பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.