1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! மதிய உணவுக்கான செலவினத் தொகையை உயர்த்திய முதல்வர் ஸ்டாலின்..!

Q

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட தமிழக
முதல்வர் மு.க.ஸ்டாலின்
உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மைய சத்துணவுத் திட்ட பயனாளி குழந்தைகளுக்கு உணவூட்டுச் செலவினம் பயனாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட செலவினப்படி, தினசரி காய்கறிகளுக்கான செலவினம் ரூ.1.33 எனவும், உப்பு உள்ளிட்ட தாளிதப் பொருட்களுக்கான செலவினம் 46 பைசா எனவும், எரிபொருளுக்கான செலவினம் 60 பைசா எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பருப்பு பயன்படுத்தும் நாட்களில் காய்கறிகளுக்கு 96 காசும், பருப்பு பயன்படுத்தாத நாட்களில்
காய்கறி
களுக்கு ரூ.1.10 காசும் என வழங்கப்பட்டு வந்த உணவூட்டுச் செலவினம் இனி அனைத்து நாட்களும் ரூ.1.33 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. பருப்பு பயன்படுத்தும் நாட்களில் உப்பு மற்றும் தாளிதப் பொருட்களுக்கு 30 காசும், பருப்பு பயன்படுத்தாத நாட்களில் உப்பு மற்றும் தாளிதப் பொருட்களுக்கு 45 காசும் என வழங்கப்பட்டு வந்த உணவூட்டுச் செலவினம் இனி அனைத்து நாட்களும் 46 காசாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
பருப்பு பயன்படுத்தும் நாட்களில் எரிபொருளுக்கு 26 காசும், பருப்பு பயன்படுத்தாத நாட்களில் எரிபொருளுக்கு 26 காசும் என வழங்கப்பட்டு வந்த உணவூட்டுச் செலவினம் இனி அனைத்து நாட்களும் 60 காசாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. பருப்பு பயன்படுத்தும் நாட்களில் மொத்தமாக ரூ.1.52 காசும், பருப்பு பயன்படுத்தாத நாட்களில் மொத்தமாக ரூ.1.81 காசும் என வழங்கப்பட்டு வந்த உணவூட்டுச் செலவினம் இனி அனைத்து நாட்களும் ரூ.2.39 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, உணவூட்டுச் செலவினம் உயர்த்தி வழங்குவதால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.41.14 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். இதன் மூலம் தமிழகத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையங்களிலுள்ள சத்துணவுத் திட்ட பயனாளிகளான சுமார் 11.50 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like