குட் நியூஸ்..! இந்த ஆண்டிற்குள் பூந்தமல்லி - போரூர் மெட்ரோ சேவை தொடங்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 3 வழித்தடங்களில் 128 ரயில் நிலையங்களுடன் ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கான 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, மொத்தம் 42.6 கிமீ சுரங்கம்ப் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அதேபோல் 3வது வழித்தடத்தில் மட்டும் 26.7 கிமீ நீளத்தில் மாதவரம் - கெல்லீஸ் மற்றும் கெல்லீஸ் - தரமணியில் இரு பகுதிகள் சுரங்கம் தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் 2வது பகுதியான கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான சுரங்க வழித்தடப் பகுதியில் கிரீன்வேஸ் மெட்ரோ நிலையம் முதல் அடையாறு மெட்ரோ நிலையம் வரை வருகிறது. தற்போது டவுன்லைன் சுரங்கம் தோண்டும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்த பணிகள் அனைத்தையும் உரிய காலத்தில் முடித்திட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், கருணாநிதி முதலமைச்சராகவும், நான் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிகள், தற்போதைய திராவிட மாடல் அரசில் விரைந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன. முந்தைய ஆட்சியின் தாமதங்களுக்குப் பிறகு, இரண்டாம் கட்டப் பணிகளை, இந்தியாவிலேயே முதன்மையாக மாநில அரசின் நிதியைக் கொண்டே தொடர்ந்து வந்தோம்.
அண்மையில், நம் கோரிக்கையை ஏற்று, ஒப்புதல் வழங்கப்பட்ட மத்திய அரசின் பங்களிப்போடு இன்னும் விரைவாகச் செயல்படுத்தி வருகிறோம். 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ இரயில் சேவை தொடங்கி வைக்கப்படும். மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளேன்.இப்பணிகள் முழுமையாக நிறைவுறும்போது, இந்தியாவிலேயே நகரப் பொதுப் போக்குவரத்து இணைப்பினில் சென்னை புதிய தர அளவுகோல்களை நிர்ணயிக்கும். நடைபெற்று வரும் பணிகளை இன்று ஆய்வு செய்தபோது, நாம் தொடங்கிய திட்டம் இன்று செயலாக்கம் பெற்று, மேலும் விரிவடைந்து வருவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். இந்த நேரத்தில் கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் ஒப்புதலையும் விரைந்து மத்திய அரசு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.