குட் நியூஸ்..! புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஊட்டி-குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் சேவை..!
தமிழ்நாட்டில் பிரபல சுற்றுலா தலமாக உள்ள நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். தினசரி ஏரளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
கோடை காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஏப்ரல், மே சீசன் காலங்களில் நீலகிரிக்கு கோடை வெயிலை சமாளிக்க, குடும்பத்துடன் மக்கள் வருவார்கள்.
மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பிரபலமானது. மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்படும் ரயில் வளைவுகள், மலைகள், அருவிகள், பாலங்கள், அடர்ந்த வனப் பகுதியை கடந்து ஊட்டி செல்கிறது. இதில் பயணிக்க பலரும் அதிகம் விரும்புவர். அவ்வப்போது மலை ரயில் பாதையில் மண், பாறைகள் சரிவு, பராமரிப்பு பணிகள் காரணமாக மலை ரயில் சேவை குறிப்பிட்ட நாட்கள் ரத்து செய்யப்படும். சீரமைப்பு பணிகளுக்கு பின்னர் மீண்டும் ரயில் இயக்கப்படும்.
இந்நிலையில் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஊட்டி – குன்னூர் மற்றும் ஊட்டி – கேத்தி – ஊட்டி இடையே வரும் டிசம்பர் 28ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே டிசம்பர் 25ம் தேதி துவங்கி ஜனவரி 1ம் தேதி வரை இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தென்னக ரயில்வே சேலம் கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.