குட் நியூஸ்..! விரைவில் வருகிறது ‘TATO' செயலி’ - இனிமே ஓலா, உபர்-க்கு பை பை..!

ஓலா , ஊபர் போன்ற தனியார் ஆட்டோ மற்றும் டாக்ஸி புக்கிங் செயலிகள் மூலமாக தனியார் நிறுவனங்கள் அதிக அளவிலான லாபத்தை ஈட்டி வருகின்றனர். ஆனால் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு மிகவும் குறைவான கட்டணமும், பயணிகளுக்கு அதிக கட்டணமும் இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்காக தமிழகத்தில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பாக அரசு புதிய செயலியை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக சனிக்கிழமை நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் தனியார் செயலி ஸ்டார்ட் அப் நிறுவனம், ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கோரிக்கையின் படி தனியார் நிறுவனம் இதற்கான செயலியை உருவாக்கி நிர்வகிக்கலாம் என்றும் ஆனால் முழு கட்டுப்பாடும் தமிழக அரசின் கீழ் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ‘TATO’ என்ற புதிய செயலியை தனியார் நிறுவனம் உருவாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் செயலி உருவாக்கும் தனியார் நிறுவனம் இதற்காக ஓட்டுநர்களிடம் எந்தவித கமிஷனும் வாங்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு ‘TATO’ என்ற ஆட்டோ மற்றும் டாக்சி புக்கிங் செயலியை தனியார் நிறுவனம் உருவாக்கி தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நியாயமான கட்டணம் மற்றும் வருமானம் நிர்ணயம் செய்யப்படும் என்றும் பொது மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தவிர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.