1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! பயணிகள் உடைமைகளைப் பாதுகாப்பாக வைக்க Smart Luggage Lockers சேவை அறிமுகம்..!

1

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நாட்டில் உள்ள மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துகிறார்கள்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மட்டும் பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் 158 ரயில்கள் இயக்கப்படுகிறது. லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் தங்களில் லக்கேஜ்களை பாதுகாப்பாக வைக்க போதிய இடம் இல்லாமல் இருந்தது. வெகு தொலைவிற்கு செல்ல வேண்டிய பயணிகள் ரயில் நிலையத்திற்குள் எங்கு சென்றாலும் லக்கேஜ்களை தூக்கி செல்ல வேண்டிய நிலையே இருந்தது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக சூப்பர் ஏற்பாடு ஒன்றை ரயில்வே தற்போது கையில் எடுத்துள்ளது. அதாவது, ரயில் நிலையத்தில் தற்போது டிஜிட்டல் லாக்கர் அறை வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

பிளாட்பார்ம் 2-ன் நுழைவு வாயில் பகுதியில் இந்த டிஜிட்டல் லாக்கர் அறை திறக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று வகையான லாக்கர்கள் உள்ளன. நடுத்தரம், பெரியது, மிகப்பெரியது ஆகிய 3 வகைகளில் லாக்கர் அறைகள் உள்ளன. அவற்றின் அளவிற்கு ஏற்ப கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வகை லாக்கர்களில் பொருட்களை வைக்க 3 மணி நேரத்துக்கு ரூ.40 கட்டணம் ஆகும். 6 மணி நேரத்துக்கு ரூ.60ம், 9 மணி நேரத்துக்கு ரூ.90-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பெரிய வகை லாக்கர்களுக்கு 3 மணி நேரத்துக்கு ரூ.50, 6 மணி நேரத்துக்கு ரூ.80, 9 மணி நேரத்துக்கு ரூ.120-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மிகப்பெரிய லாக்கர் பெட்டிகளுக்கு 3 மணி நேரத்துக்கு ரூ.60, 6 மணி நேரத்துக்கு ரூ.100, 9 மணி நேரத்துக்கு ரூ.150-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, ஒரு நாளைக்கு டிஜிட்டர் லாக்கர் பெட்டியை பயன்படுத்த நடுத்தர பெட்டிகளுக்கு ரூ.120, பெரிய பெட்டிகளுக்கு ரூ.160, மிகப்பெரிய பெட்டிகளுக்கு ரூ.200 கட்டணமாகும். மொத்தம் 84 லாக்கர் பெட்டிகள் இங்கு உள்ளது.

டிஜிட்டல் லாக்கர் பெட்டிகள் முழுவதும் செல்போன் மூலமே இயங்கக்கூடியது. பயணிகள் இதை பயன்படுத்த வேண்டும் என்றால் தங்கள் செல்போனில் உள்ள கூகுள் லென்ஸ் வழியாக, டிஜிட்டல் லாக்கரில் உள்ள கியூ-ஆர் கோடை ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். பின்னர், தங்களுக்கு தேவையான டிஜிட்டல் லாக்கரை தேர்வு செய்து கட்டணம் செலுத்தி லக்கேஜ்களை வைக்க வேண்டும். எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோமோ அதற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். செல்போன் இன்றி இந்த லாக்கர் வசதியை பயன்படுத்த முடியாது. எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோம் என்ற விவரங்கள் செல்போன் வழியாக தெரிவிக்கப்பட்டு விடும். லாக்கரை ஒபன் செய்ய கியூ ஆர் கோடு கொண்டே திறக்க முடியும். இந்த லாக்கரில் எளிதில் தீ பிடிக்க கூடிய பொருட்களை வைக்க அனுமதி கிடையாது.


 

Trending News

Latest News

You May Like