குட் நியூஸ்..! அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ. 21 கோடி ஒதுக்கீடு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திட்டம் அம்மா உணவகம். மிகவும் குறைவான விலையில் 3 வேளை உணவுகளை வழங்கும் அம்மா உணவகம் லட்சக்கணக்கான ஏழை மக்களின் பசியை ஆற்றியது. முதலில் சென்னையிலும், பின்னர் தமிழகத்தின் பல நகரங்களிலும் அம்மா உணவகம் கொண்டு வரப்பட்டது.
ஒரு இட்லி 1 ரூபாய்க்கும், மதிய உணவாக சாம்பார் சாதம், கலவை சாதம் போன்றவை 5 ரூபாய்க்கும், இரவு 2 சப்பாத்தி குருமா 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு, ஏழைகளின் பசியை ஆற்றி வருகிறது. ஆனால், சமீபகாலமாக அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றவையாகவும், சுவை இல்லாதவையாகவும் இருப்பதாக புகார்கள் எழுந்தன. அதேபோல, முறையான பராமரிப்பின்றி அம்மா உணவகங்கள் அசுத்தமாக இருப்பதாகவும், சப்பாத்தி, கலவை சாதம் போன்றவை தரப்படுவதில்லை எனவும் கூறப்பட்டன.
இன்று (ஜூலை 19) சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது உணவகத்தில் சாப்பிடுபவர்களிடன் குறைகளை கேட்டறிந்தார். இந்நிலையில், அம்மா உணவகத்தில் ஆய்வு நடத்திய 15 நிமிடங்களில் முதல்வர் ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பு வெளியானது.
உணவகங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள பாத்திரங்கள், கருவிகளை மாற்றவும், சுவையான, தரமான உணவை தயாரித்து வழங்கவும் அறிவுறுத்தினார். அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதில், புதிய பாத்திரங்கள், கருவிகள் வாங்க ரூ.7 கோடி; புனரமைப்பு பணிகளுக்காக ரூ.14 கோடி ஒதுக்கப்படுகிறது. அம்மா உணவகங்களில் அவ்வப்போது ஆய்வு செய்ய அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.முதல்வரின் இந்த அறிவிப்பால் அம்மா உணவகங்கள் மீண்டும் பழைய பொழிவை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.