குட் நியூஸ்..! இன்று தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்கள் இயங்கும்..!

சித்திரை முதல் நாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் ஆகிய நாட்களில், சொத்து பத்திரங்களை பதிவு செய்ய, பலரும் விரும்புகின்றனர். ஆனால், இந்த நாட்கள் அரசு விடுமுறை என்பதால், சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுவதில்லை.
இதனால், மக்கள் தங்களுக்கு விருப்பமான மங்களகரமான நாட்களில், பத்திரப்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இது தொடர்பாக, பல்வேறு தரப்பினரும், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் தமிழக அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் அரசு பொது விடுமுறை மற்றும் உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும் சில மங்களகரமான நாட்களில் பொது மக்களால் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்திட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்தவகையில், முக்கிய நாட்களில் பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அன்றைய நாட்களில் அதிகமான அளவில் பத்திரப் பதிவுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று 11.02.2025 (செவ்வாய்கிழமை) தைப்பூசம் நாளில் ஆவண பதிவுகள் மேற்கொள்ள வசதியாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் காலை 10 மணி முதல் மாலை 6 வரை இயங்கும். விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு பதிவுச் சட்டம் கீழுள்ள Table of fees இனம் 17(3)-ன் ஏ,பி,சி-ல் கூறப்பட்டவாறு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.