குட் நியூஸ்..! அரசு பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் அறிமுகம்..!
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எழுத்துக் கூட்டி படிப்பதில் பலருக்கு சிரமம் இருக்கும். மேலும் வேகமாக வாசிப்பதிலும் சிரமப்படுவர்.
இவற்றை சரிசெய்ய தொடர்ச்சியான வாசிப்பு என்பது அவசியம். அதிலும் பாடப் புத்தகங்களை தாண்டி பல்வேறு புத்தகங்களை படித்து ஆற்றலை வளர்த்து கொள்ள வேண்டும். இதை கருத்தில் கொண்டு கர்நாடகா மாநில பள்ளிக் கல்வித்துறை முக்கிய ஏற்பாட்டை செய்துள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள 47 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 7ஆம் வகுப்பு வரை வாசிப்பு இயக்கத்தை அறிமுகம் செய்துள்ளனர்.
அடுத்த 21 நாட்களுக்கு வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். அதாவது, ஒவ்வொரு நாள் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை அரை மணி நேரத்திற்கு மற்ற வேலைகளையும் ஓரங்கட்டி வைத்து விடுவர். இதையடுத்து ஆசிரியர்கள் உதவியுடன் புத்தகங்களை எடுத்து மாணவ, மாணவிகள் வாசிப்பர். இதற்கான புத்தகத்தை ஆசிரியர் தேர்வு செய்து வழங்குவார்.
ஒவ்வொரு வகுப்பிற்கும் எந்தெந்த புத்தகம் படிக்க ஏற்றதாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு அதற்கேற்ப கதை புத்தகங்களை அளிப்பர். இந்த வாசிப்பு இயக்கத்துடன் பள்ளியில் உள்ள நூலகங்கள், வகுப்பறை புத்தக அலமாரிகள் ஆகியவற்றிலும் மாணவர்கள் பங்களிப்பை செலுத்தவுள்ளனர்.
கிழிந்த புத்தகங்களை ஒட்டி வைத்தல், செய்தித்தாள்கள் வாசித்தல், செய்தித்தாள்களில் இருந்து காமிக்ஸ் பட்டைகளை சேகரித்தல், அவற்றை நோட்டு புத்தகங்களில் ஒட்டி கொள்ளுதல், இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பள்ளி பிரார்த்தனை கூட்டத்தில் வாசித்தல் போன்ற செயல்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பள்ளியில் மட்டுமின்றி வீட்டிலும் புத்தகங்களை வாசிக்க ஊக்குவிக்கப்படுவர். இதற்காக சிறியதாக நூலகம் ஒன்றை அமைக்கவும் அறிவுறுத்தப்படுவர். வாசிப்பு இயக்கத்திற்காக அனைத்து பள்ளிகளிலும் பல்வேறு விதமான புத்தகங்களை சேகரித்து வைக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு அளிக்கப்படும் நூலக நிதியை பயன்படுத்தி கொள்ளலாம்.