குட் நியூஸ்..! இன்று ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்!!
தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் அனைத்தும் இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை அரசு அலுவலகங்கள் அனைத்தும் விடுமுறையில் இருக்கும். மக்களுக்கு உணவுப்பண்டங்களை விநியோகிக்கும் நியாயவிலைக் கடைகள் முதற்கொண்டு அனைத்தும் செயல்படாது. ஏதேனும் சில அவசரக் காலங்களில் மட்டுமே இந்த விதிக்கு தளர்வு வழங்குவர்.
மே மாதம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு பொது விநியோக பொருட்களை இன்னும் முழுமையாக கொடுக்கப்படவில்லை. இந்த மாதத்திற்கான கொள்முதல் தாமதமாகவே துவங்கியது.. இதன் காரணமாக, 2.20 கோடி கார்டுதாரர்களுக்கு உரிய பொருட்கள் இன்னும் கடைகளுக்கு முழுதுமாக அனுப்பப்படவில்லையாம்.. இதனால் பருப்பு, பாமாயில் வாங்காமலேயே நிறைய பேர் இருக்கிறார்களாம். எனவே, அவற்றை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இதன்காரணமாக, இன்று அதாவது ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறைக்கு பதில், பணி நாளாக அறிவித்து, உணவு துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, உணவு வழங்கல் துறை ஆணையர், கலெக்டர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், "மே மாத சிறப்பு பொது வினியோக திட்ட பொருட்களின் இயக்கத்தினை, உரிய காலத்திற்குள் முடிக்க, அனைத்து ரேஷன் கடைகளுக்கும், 26ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது; அதற்கு ஈடான விடுமுறை பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.