குட் நியூஸ்..! எம்.சாண்ட், ஜல்லி விலை ரூ.1000 குறைப்பு..!

கட்டுமானத்துக்கு தேவையான எம்.சாண்ட் விலை மட்டும் கடந்த 8 மாதங்களில் 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கூட ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வு அமலுக்கு வந்தது. யூனிட் ஜல்லி விலை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், எம்.சாண்ட் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாகவும், பி.சாண்ட் விலை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், க்ரஷர் உரிமையாளர்களை அழைத்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் எம்.சாண்டு, பி.சாண்டு மற்றும் ஜல்லியின் உயர்த்தப்பட்ட விலையில் இருந்து ரூ.1000 குறைத்து விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 ஆக நிர்ணயம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் துரை முருகன் தலைமையில் நடந்த கல்குவாரி, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து, எம். சாண்ட், பி சாண்ட், ஜல்லி விலை உயர்த்தப்பட்ட ஒரே வாரத்தில் ரூபாய் 1000 அளவுக்கு விலை குறைக்கப்பட உள்ளது.