குட் நியூஸ்..! ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்..!!

தொடர் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது.இந்த விதிமுறையை தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியில்லாதவர்கள் என்ற அம்சத்தின் கீழ் கொடுத்துள்ளது.
அதேநேரத்தில், சில ஓய்வூதிய திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு விலக்கு கொடுத்திருக்கிறது. இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசு விதிப்படி, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என தெரிவித்துள்ளது.
அதேபோல், வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்றும் விளக்கியுள்ளது.
எனவே, தவறான தகவல்களை நம்பி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு இதுவரை இத்தகைய குடும்பத்தினர் விண்ணப்பிக்காமல் இருந்தால் உடனடியாக விண்ணப்பிக்கவும்.