குட் நியூஸ்..! இனி பட்டா மாறுதல் சான்றிதழ்கள் 16 நாட்களில் கிடைக்கும்..!
தற்போது நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாகியுள்ளது. தற்போது பண பரிவர்த்தனை முதல் அரசு சான்றிதழ்கள் பெறுவது வரை அனைத்தும் ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். அதனை தொடர்ந்து தற்போது பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக 16 நாட்களுக்குள் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடைமுறையை விரைவுபடுத்தி கண்காணிக்க சிறப்பு அலுவலர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி மாவட்ட மற்றும் தாலுகா அளவில் ஆன்லைன் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல்களின் முன்னேற்றத்தை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்வதற்காக துணை ஆட்சியர் அளவில் ஒரு நோடல் அதிகாரியை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தாலுகாவிற்கு வெளியில் இருந்து துணை தாசில்தார் அல்லது உதவியாளர்கள் குழுவை கண்காணிக்க ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு துணை ஆட்சியர் நியமிக்கப்படுவார் என்று வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் எஸ்.கே. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதிய கடிதத்தில்,
‘‘ஒரு குறிப்பிட்ட தாலுக்காவிற்கான துணை தாசில்தார் அல்லது உதவியாளர்களைக் கொண்ட மேற்கண்ட குழு, ஒதுக்கப்பட்ட தாலுகாக்களில் மின்-சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல்கள் வழங்குவதில் முன்னேற்றம் மற்றும் செயல்திறனை மதிப்பாய்வு செய்யும். சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் 16 நாட்களுக்கு மேல் நிலுவையில் வைக்கப்படாமல், சரியான நேரத்தில் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.