குட் நியூஸ்..! ஊட்டி மலை ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்..!

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யூனஸ்கோ அந்தஸ்து பெற்ற நூறாண்டு பழமையான, ஊட்டி மலை ரயிலில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், ஆர்வமுடன் பயணம் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனுக்கு, தென்னக ரயில்வே நிர்வாகம், ஊட்டிக்கு சிறப்பு மலை ரயிலை இயக்கி வருகிறது. அதன்படி, இந்தாண்டு கோடை கால சீசனுக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு இன்று முதல் சிறப்பு மலை ரயிலை ரயில்வே நிர்வாகம் இயக்கியது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும், காலை, 9:10 மணிக்கு இயக்கப்பட உள்ளது. அதே போன்று ஊட்டியில் இருந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும், திங்கட்கிழமையும் காலை, 11:25 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ஊட்டி சிறப்பு மலை ரயில் மார்ச், 28ம் தேதி முதல் ஜூலை, 6ம் தேதி வரை இயக்கப்படும். இன்று காலை, 9:10 மணிக்கு துவங்கிய, ஊட்டி சிறப்பு மலைரயிலில், கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவ, மாணவியர் உட்பட, 180க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உற்சாகமுடன் பயணம் செய்தனர்.