குட் நியூஸ்..! இந்த பேருந்தில் ஒரு முறை டிக்கெட் எடுத்தால் மாலை வரை பயணிக்கலாம்..!
மலைகளின் அரசியல் அழைக்கப்படும் உதகையில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து உதகை படகு இல்லம், ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்கா, தேயிலை அருங்காட்சியகம் மற்றும் தொட்டபெட்டா மலை சிகரம் போன்ற முக்கிய சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று சென்று வர இன்று முதல் சுற்றுலா பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் கொடி அசைத்து சுற்றுலா பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். அத்துடன் மலை கிராமங்களுக்கு புதிய பேருந்து வழித்தடத்தையும் தொடங்கி வைத்தார். முதற்காட்டமாக இந்த சுற்றுலா பேருந்துகள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் காலை முதல் மாலை வரை சுழற்சி முறையில் தொடர்ந்து இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து படகு இல்லம், ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, தேயிலை அருங்காட்சியகம், தொட்டபெட்டா மலை சிகரம் வரை இயக்கப்பட உள்ளது. இந்த சுற்றுலா பேருந்தில் பெரியோர்கள் 100 ரூபாய், சிறியவர்கள் 50 ரூபாயும் கட்டணமாக செலுத்தி ஒரு முறை டிக்கெட் எடுத்து மாலை வரை பயணிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
சுற்றுலா பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கா.ராமச்சந்திரன்: கோடை காலம் தொடங்கியதை எடுத்து சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுற்று பேருந்து சேவை தொடங்கி இருப்பதாகவும் அதிகமான சுற்றுலா பயணிகள் செல்வதால் நல்ல லாபம் கிடைப்பதாகவும் கூறினார். அதிக பேருந்துகள் விடப்பட்டிருப்பதாகவும் தற்போது உள்ள பழைய பேருந்துகள் அனைத்தும் படிப்படியாக மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.