குட் நியூஸ்..! கோயம்பேட்டில் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம்..!
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, ‘கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து முனையம்’ என்று பெயரிடப்பட்டு திறக்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னையில் இருந்து விரைவு போக்குவரத்து கழகத்தின் விரைவு, சொகுசு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஜனவரி 24ம் தேதிக்கு பிறகு அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரும் வரை ஆம்னி பேருந்துகள் சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்தே இயக்கப்பட வேண்டும் எனவும் மீறினால், அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அறிவித்தது. மேலும் ஜன.24 ஆம் தேதி முதல் கோயம்பேடு மூடப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து இயக்கப்பட்ட சில ஆம்னி பேருந்துகளையும் போக்குவரத்துதுறையினர் கைப்பற்றினர்.
இதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க போடப்பட்ட உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்களும், ஆம்னி பேருந்து சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன.
இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் சென்னை கோயம்பேட்டை சுற்றிய ஆம்னி பஸ் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம் என நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளையும் ஏற்றலாம் எனவும், கிளாம்பாக்கத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென்மாவட்ட ஆம்னி பஸ்களை இயக்க கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும்வரை கோயம்பேடு ஆம்னி பஸ்களின் பணிமனைகளை பயன்படுத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.