குட் நியூஸ்..! இனி பிஎஃப் பணத்தை ஈசியா எடுக்கலாம்..அதுவும் இரண்டே நாளில்...

பிஎஃப் பணத்தை ஆன்லைனில் எடுக்கும்போது ரத்து செய்யப்பட்ட காசோலையை வழங்கவோ அல்லது நிறுவனம்/முதலாளியிடமிருந்து ஒப்புதல் பெறவோ தேவையில்லை என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
பிஎஃப் பணத்தை எடுக்க ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது பாஸ்புக் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பிஎஃப் சந்தாதாரரின் வங்கிக் கணக்கைச் சரிபார்க்க நிறுவனத்தின் ஒப்புதல் தேவையில்லை. பிஎஃப் சந்தாதாரர் தனது வங்கிக் கணக்கை மாற்ற விரும்பினால் அவர் ஆதார் மூலம் அனுப்பப்படும் OTP நம்பர் உதவியுடன் ஆன்லைனில் ஒரு புதிய கணக்கைச் சேர்க்கலாம்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இந்த முடிவு கோடிக்கணக்கான சந்தாதாரர்களுக்கு பயனளிக்கும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் தற்போது சுமார் 7.74 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். அவர்களில், 4.83 கோடிப் பேர் தங்கள் வங்கிக் கணக்குகளை UAN உடன் இணைத்துள்ளனர். முதலாளிகளிடமிருந்து ஒப்புதல் இல்லாததால் சுமார் 15 லட்சம் பேரின் பிஎஃப் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இந்த புதிய நடவடிக்கை அவர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இனிமேல், பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு ரத்து செய்யப்பட்ட காசோலைகள் அல்லது முதலாளியின் ஒப்புதல் தேவையில்லை என்ற முடிவு PF சந்தாதாரர்களுக்கு பல நன்மைகளைக் கொண்டுள்ளது. பிஎஃப் பணத்தை எடுப்பது இனி மிகவும் எளிமையானதாக இருக்கும். பல வகையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பிஎஃப் சந்தாதாரர்கள் சில எளிமையான படிகளைப் பின்பற்றுவதன் மூலம் ஆன்லைனில் எளிதாக உரிமை கோரலாம்.
பிஎஃப் பணத்தை எடுப்பதற்காக கோரிய இரண்டு நாட்களுக்குள் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு எடுத்துள்ள இந்த முடிவு பயனாளிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.