குட் நியூஸ்..! இனி விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு நடந்தே செல்லலாம்..!

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப்படியான பாறைகளும் உள்ளன.
இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் இயக்கப்படுவதில்லை. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இதைத்தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டுபாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன் பயனாக ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது தாங்கள் நடந்து செல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டு உள்ளது போல இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட உள்ளது.
விவேகானந்தர் பாறை அமைந்துள்ள கடல் பகுதியில் 3 ராட்சத தூண்களும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள கடல் பகுதியில் 3 ராட்சத தூண்களும் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. இந்த ராட்சத தூண்கள் கடல் உப்பு காற்றினால் பாதிக்காத வகையில் ரசாயன கலவை கலந்த சிமெண்ட் காங்கிரீட் மூலம் அமைக்கப்பட்டு உள்ளது.
கடல் உப்பு காற்றினால் துருப்பிடிக்காத வகையில் ஸ்டீன்லெஸ் கம்பிகள் மூலம் இந்த கூண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 101 பாகங்களாக இந்த கூண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த கூண்டில் தற்போது வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. வர்ணம் பூசும் பணியும் முடிந்ததும் இந்த கூண்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டு கன்னியாகுமரிக்கு விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.
அதன் பிறகு விவேகானந்தர் மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள ராட்சத தூண்கள் மீது தொழில் நுட்ப வல்லுனர்கள் மூலம் இந்த 101 பாகங்களும் இணைக்கப்பட்டு கூண்டு பொருத்தப்பட உள்ளது.