குட் நியூஸ்..! இனி வீட்டில் இருந்தே முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகள் எடுக்கலாம்..!
இந்தியாவில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். டிக்கெட் முன்பதிவு செய்தால் செல்ல வேண்டிய இடத்துக்கு படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியில் பயணிக்க முடியும் என்பதால் இன்னும் கூட ரயில் பயணத்தின் மீதான மவுசு குறையவில்லை. அதேபோல் முன்பதிவு செய்யாதவர்கள் பயணம் செய்ய முன்பதவில்லாத பெட்டிகள் உள்ளது. முன்பதிவு செய்யாத ரயில் டிக்கெட்டுகளை பெறுவதற்கு பல மணி நேரம் காத்திருந்து ரயிலை தவறவிட்டவர்கள் ஏராளம்.
இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கவுன்ட்டரில் நீண்ட நேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலமாக முன்பதிவில்லாத ரயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட், மின்சார ரயிகளுக்கான டிக்கெட் ஆகியவற்றை பெறும் வசதி உள்ளது.
இருந்த போதிலும், ஜியோ பென்சிங் என்ற கட்டுப்பாடுகள் இருந்ததால் குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே இருந்து டிக்கெட்களை பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், ஜியோ பென்சிங்கின் வெளிப்புற எல்லையை ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது.
இதனால் யூடிஎஸ் செயலி மூலம் ரயில் நிலையம் உட்பகுதி தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், டிக்கெட் எடுத்த 2 மணி நேரத்துக்குள் பயணம் தொடங்கும் நிலையத்தை அடைந்துவிட வேண்டும். இத்தகவலை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.