குட் நியூஸ்..! இனி விவசாய உபகரணங்களை வாடகைக்கு பெறலாம்..!
வேளாண்மை பொறியியல் துறையின் சார்பாக வேளாண் இயந்திரங்கள், கருவிகள் இயக்குதல், பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.. இந்த முகாமை கோவை எம்பி கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர், "கோவை மாவட்டத்தில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க இயந்திரமயமாக்கலை அதிகப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காகவே, இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயத்தை எளிதாக்கும் வகையில், விவசாயத்தில் பல்வேறு உபகரணங்கள் குறித்தும், அதற்கான திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கண்காட்சி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.. இந்த உபகரணங்களை எப்படி செயல்படுத்துவது ? எவ்வாறு பராமரிப்பு ? என்பதும் குறித்தும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
விவசாயத்திற்கான உபகரணங்களை, இ-வாடகை என்ற செயலி மூலம் விவசாயிகள் வாடகைக்கு எடுத்து பெற்று பயன் பெறலாம். இந்த செயலியை உபயோகிப் பதற்கான பயிற்சி இங்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு உபகரணங்களுக்கும் தகுந்தாற்போல் வாடகை வசூல் இருக்கும் என்பதால், பணத்தை கட்டி அந்த உபகரணங்களை விவசாயிகள் பயன்படுத்தலாம்" என்று கேட்டுக் கொண்டார்.
இதுபோலவே, நாமக்கல் மாவட்டத்தில் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை பயன்படுத்தி கொள்ள விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் ச.உமா அழைப்பு விடுத்துள்ளார்.. இந்த உபகரணங்களை பெற வேண்டுமானால் இ-வாடகை செயலி மூலம் வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்து கொள்ளலாம்.. தமிழக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்திருக்கும் இந்த தகவலானது, தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.