1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி பக்தர்கள் தினமும் சதுரகிரி மலைக்கு செல்லலாம்..!

1

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுந்தரபாண்டியம் பகுதியைச் சேர்ந்த சடையாண்டி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கசுவாமி கோவிலில் உள்ள ஆனந்தவள்ளி அம்மனுக்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா நடத்தி வருகிறோம். சமீப காலங்களாக சதுரகிரி மலையில் பக்தர்கள் இரவில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் எங்களது வழிபாடு தடைபடுகிறது.

எனவே நவராத்திரி விழாவையொட்டி சதுரகிரி மலையில் இரவு நேரங்களில் தங்குவதற்கு அனுமதிக்க வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சதுரகிரி மலைப்பகுதி தற்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாதம் இருமுறை மட்டும் பக்தர்கள் மலைக்கு மேல் சென்று சுந்தர மகாலிங்கம் கோவிலில் வழிபட அனுமதிக்கப்பட்டு உள்ளது என்றார். 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவின் விவரம் வருமாறு:

பொதுமக்களுக்கு வழிபாட்டு சுதந்திரமும் முழுமையாக வழங்கப்படுவது அவசியம். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள கோயில்களில் பக்தர்கள் வழிபடுவதற்கு ஏற்கனவே நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதை வனத்துறை தடுக்க இயலாது. இயற்கை பேரிடரில் பக்தர்கள் சிக்குவதை தவிர்க்கும் வகையில் சதுரகிரி மலைப்பகுதியில் ஆங்காங்கே பாலங்கள் அமைக்கப்படும் என ஏற்கனவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மலையடிவாரத்தில் இருந்து வனத்துறை சோதனை சாவடி வழியாக பக்தர்களை அனுமதிக்க வேண்டும். அதேபோல கோயிலில் இருந்து மாலை 4 மணிக்குள் அடிவாரத்துக்கு பக்தர்கள் திரும்புவதை உறுதிப்படுத்த வேண்டும். இரவில் யாரும் அனுமதியின்றி மலையில் தங்கக்கூடாது.

மீறி யாராவது உரிய அனுமதியின்றி இரவில் தங்கினால் கைது நடவடிக்கையை வனத்துறை எடுக்கலாம். அதேபோல தினமும் எத்தனை பேர் மலைக்கு சென்று திரும்புகின்றனர் என்பதையும் வனத்துறையினர் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பருவகால மாற்றம், பேரிடர் சமயங்களில் பக்தர்களை மலை ஏற அனுமதிப்பது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முடிவே இறுதியானது. மலைப்பாதைகளில் குப்பை போடுவது, பாலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

வனத்துறை சோதனைச்சாவடியில் பக்தர்களை முழுமையாக சோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும். பக்தர்களை கண்காணிக்க ஆங்காங்கே வனத்துறையினர் பணியில் ஈடுபடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதற்கு வனத்துறை மற்றும் அறநிலையத்துறையினர் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது.

தற்போது நீதிமன்றம், சதுரகிரி மலைக்கு தினமும் செல்லலாம் என்று அறிவித்துள்ளது. அதேநேரத்தில், காலை 6 மணி முதல் 10 மணி வரை மலையடிவாரத்தில் இருந்து வனத்துறை சோதனை சாவடி வழியாக பக்தர்களை அனுமதிக்க வேண்டும். அதேபோல கோயிலில் இருந்து மாலை 4 மணிக்குள் அடிவாரத்துக்கு பக்தர்கள் திரும்புவதை உறுதிப்படுத்த வேண்டும். இரவில் யாரும் அனுமதியின்றி மலையில் தங்கக்கூடாது என்பது போன்ற சில முக்கிய நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இதையெல்லாம் பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகிறது.
 

Trending News

Latest News

You May Like