குட் நியூஸ்..! இனி இனி ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு..!
ஆவின் நிர்வாகம் பால், தயிர், நெய், வெண்ணெய், பன்னீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் உபபொருள்களை ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 524 கோடி மதிப்பில் ஆவின் பால் மற்றும் பால் உபபொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் கடந்த சில மாதங்களாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகளை மொத்த விற்பனையாளர்களாக நியமித்து அவர்களின் மூலம் ஆவின் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் ஆவின் பொருள்களின் விற்பனை சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஆவின் பொருள்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையா கூறுகையில், "ஆவின் தயாரிப்புகளை நியாய விலை கடைகளில் விற்பனை செய்வோம். தற்போது ஆவின் தயாரிப்புகள், பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகிறது. நியாய விலை கடைகளில் இட வசதி மற்றும் இதர வசதிகளை ஆய்வு செய்த பிறகு ஆவின் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வோம்" என்றார்.
ஆவின் அதிகாரிகள் கூறுகையில், "விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஆவின் பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ரேஷன் கடைகளில் விற்கும் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.8 கோடி முதல் ரூ.9 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.