குட் நியூஸ்..! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை..!
இந்தியாவில் இருந்தும் ஆண்டுதோறும் இலங்கைக்கு லட்சக்கணக்கான மக்கள் சுற்றுலா செல்கின்றனர். கொரோனா ஏற்பட்ட பிறகு இலங்கையின் சுற்றுலாத்துறை அதளபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. அந்த நாட்டின் பொருளாதாரமே சுற்றுலாவை பிரதானமாக நம்பியுள்ள நிலையில், மீண்டும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக அந்த நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இலங்கைக்கு வரும் 35 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இன்று முதல் விசா தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளும் அடங்கும். விசா இல்லாமல் இந்த 35 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அடுத்த 6 மாதங்களுக்கு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள முடியும் என்றும் அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம் இலங்கைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அந்த நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு ஆண்டுதோறும் அதிகளவு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம் ஆகும். 2023ம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்களில் 20 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவார்கள். இலங்கை அரசின் புதிய விசா கொள்கையால் சுற்றுலாவிற்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா மட்டுமின்றி நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கஜகஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், இந்தோனேஷியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், ப்ரான்ஸ், கனடா, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாரஸ், ஈரான், சுவீடன், தென் கொரியா, கத்தார், ஓமன், பஹ்ரைன் மற்றும் நியூசிலாந்து நாட்டினரும் விசா இல்லாமல் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளலாம்.