குட் நியூஸ்..! தமிழகத்தில் ஜூன் 6 பள்ளிகள் திறப்பு இல்லை..!
கோடை வெளியின் தாக்கத்திலிருந்து மாணவர்களை பாதுக்காக்கும் நோக்கில் பள்ளி திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது பள்ளிக் கல்வித்துறை.
தமிழக பள்ளிக் கல்வியில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தை விட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ம் தேதி வரையும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. கடந்த கல்வி ஆண்டுக்கான தேர்வு முடிவுகளும் சமீபத்தில் வெளியிடப்பட்டுவிட்டன.
இதற்கிடையே, வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை அளித்து, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்தாண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாவதால் பள்ளிகள் ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகரித்து, அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. எனவே, மாணவர்களின் நலன்கருதி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ஜூன் 6-ம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 10-ம் தேதி அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.