1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படாது: அமைச்சர்..!

Q

போக்குவரத்துத் துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (ஜூன் 3) அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “இரண்டொரு நாள்களாக சில ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் தமிழ்நாட்டில் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன. அந்த செய்தி முற்றிலும் தவறானது. தமிழ்நாட்டில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நீதிமன்றம் இது தொடர்பாக மக்களின் கருத்தை அறிந்து ஒரு தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருக்கிறது. அந்த அடிப்படையில் மக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தனியார் பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அவர்களது பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். அதனால் தான் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது

ஏனென்றால் தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு பேருந்து கட்டணத்தை ஒட்டியே தனியார் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும். அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பதால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் மத்திய அரசு டீசல் விலையை குறைக்கவில்லை. இருந்தாலும் பொது மக்கள் மீது அந்த சுமை ஏற்றப்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு கட்டணத்தை உயர்த்தும் எண்ணத்தில் இல்லை. தமிழ்நாடு அரசு உயர்த்தவில்லை என்பதால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நீதிமன்றம் மக்களிடம் கருத்து கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய கூறியுள்ளது.

நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு எடுத்து வைக்கப்படும். நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பிறகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய அறிவுரை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் இந்த அறிவிப்பு மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like