1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! அங்கன்வாடி பணியாளர்களுக்கு புதிய கைப்பேசி... 200 பெண் ஓட்டுநர்களுக்கு பிங்க் ஆட்டோ..!

1

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார்.

1.சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 பிங்க் ஆட்டோ (Pink Auto) திட்டம் செயல்படுத்தப்படும்.

பெண்களுக்காகப் பெண்களே ஓட்டும் `பிங்க் ஆட்டோ' அறிமுகம் செய்யப்படவுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், அவர்களின் வாழ்வில் சுயதொழில் மூலம் முன்னேற, இந்த பிங்க் ஆட்டோ திட்டம் உறுதுணையாக இருக்கும். இந்த வாய்ப்பு, சுயதொழிலில் ஆர்வமுள்ள அனைத்து தரப்பு பெண்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிங்க் ஆட்டோக்கள், சென்னையில் சில முக்கிய பஸ் ஸ்டாண்டுகள், மெட்ரோ ரயில் நிலையங்களில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும். இதில், ஓட்டுநரின் முழுவிவரம், இலவச WiFi, FM, ஜி.பி.எஸ் மற்றும் மீட்டர் ஆகிய அம்சங்கள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, கூடுதல் சிறப்பாக இந்த Pink Auto சேவையைப் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். 

2. சமூக நலத்துறையின் மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகளில் ஒன்றான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1,20,000 ஆக உயர்த்தப்படும்.

3. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு சுயதொழில் செய்ய தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 கோடி மானியம் வழங்கப்படும்.

4.திருவள்ளூர், கோயம்பத்தூர், திருப்பூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 6 அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள் ரூ.1 கோடியில் மறுசீரமைக்கப்படும்.

5. அனைத்து மாவட்டங்களிலும் 500 பயனாளிகளுக்கு மேல் உள்ள 451 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.9 கோடியில் முட்டை உரிப்பான் இயந்திரங்கள் வழங்கப்படும்.

6. ரூ.29 கோடி செலவில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு புதிய கைப்பேசிகள் வழங்கப்படும்.

7.கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்படும் சிறார்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதை திட்டம் ரூ.40 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.

8. மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் கூடுதல் துயில்கூடங்கள் ரூ.1 கோடியில் அமைக்கப்படும்.

9. சென்னை, திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தன்னார்வத் தொன்டு நிறுவனங்கள் மூலமாக இரவல் பெறுவோர்களின் மறுவாழ்வுக்கான இல்லங்கள் ரூ.2.80 கோடியில் அமைக்கப்படும்.

10.கோயம்புத்தூர் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் கண்காணிப்பாளர் மற்றும் உதவி கண்காணிப்பாளருக்கான புதிய குடியிருப்பு கட்டடங்கள் ரூ.2 கோடியில் கட்டப்படும்.
 

11. 6 அரசு சேவை இல்லங்கள் மற்றும் 27 அன்னை சத்யா குழந்தைகள் காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு 1.90 கோடி ரூபாய் மதிப்பில் தற்காப்பு கலை மற்றும் விளையாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.

12. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 12,567 அரசு மற்றும் தனியார் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006 தொடர்பாக விழிப்புணர்வு பலகைகள் 62.83 இலட்சம் ரூபாய் செலவினத்தில் அமைக்கப்படும். 

13. முதியோர் ஆரோக்கியத்துடன், சுறுசுறுப்பாக வாழ, மாநில அரசு மானியம் பெறும் 23 முதியோர் இல்லங்கள் மற்றும் 44 ஒருங்கிணைந்த வளாகங்களில் உள்ள 2,020 முதியோர் பயனடையும் வகையில் 40.20 லட்சம் ரூபாய் மதிப்பில், யோகா, மூச்சுப் பயிற்சி, தியானப் பயிற்சி போன்றவை தகுதி வாய்ந்த பயிற்றுநர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படும். 

14. ஆதரவற்ற முதியோர் நலனுக்காக 7 சுற்றுலா தலங்களில் உள்ள முதியோர் இல்லங்களில், சிறப்பு தங்கும் வசதிகள் 40 லட்சம் தருபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். 

15. தனியாரால் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் பதிவு மற்றும் உரிமம் பெறும் நடைமுறை, எளிய ஆளுமை (Simple Governance) திட்டம் மூலம் எளிதாக்கப்படும் 

16. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 54,449 குழந்தைகள் மையங்களுள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5,590 குழந்தைகள் மையங்களை 55.9 0 கோடி ரூபாய் செலவினத்தில் சீர்மிகு குழந்தைகள் மையங்களாக தரம் உயர்த்தப்படும். 

17. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சொந்த கட்டடங்களில் செயல்பட்டு வரும் 6, 5 2 7 குழந்தைகள் மையங்களில் 11.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும். 

18. பச்சிளம் குழந்தைகளுக்கு சத்தான உணவு ஊட்டுதல் முக்கியத்துவம் குறித்து பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு பயிலரங்கங்கள் (Workshops) நடத்தப்படும் 

19. குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் உயரம் ற்றும் எடையை அளவிடுவதற்கு குழந்தைகள் வழங்கப்பட்டுள்ள மையங்களுக்கு நான்கு வகையான வளர்ச்சிக் கண்காணிப்பு கருவிகள் 14.18 கோடி ரூபாய் செலவினத்தில் புதியதாக மாற்றி வழங்கப்படும். 

20. அரசு நிறுவனங்களில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் பாதுகாப்பினை கண்காணிக்க குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் இயக்குநரகத்தில் ஒருங்கிணைந்த சிறப்பு கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்படும். என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

Trending News

Latest News

You May Like