குட் நியூஸ்..! விரைவில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் - அமைச்சர் அறிவிப்பு..!

அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசியதாவது, பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது
பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.15 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று அவற்றை தீர்க்க 45 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தால் தகுதியுள்ளவர்களுக்கு 15 நாட்களில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 20 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 20 லட்சம் லேப்டாப் வழங்கப்படவுள்ளது. விவசாயிகளுக்கு 2 இலட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.