1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! விரைவில் 'மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு' நடைமுறைக்கு வரும் - அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி..!

Q

தமிழ்நாட்டில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் பெறப்பட்டு வருகிறது. இதை மாதம் ஒருமுறை கணக்கீடு செய்யவேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை இருந்தது. 
 
மேலும், மாதம் ஒரு முறை என்ற அடிப்படையில் கணக்கீடு செய்யும் போது, ஒவ்வொரு மாதமும் 100 யூனிட் இலவசமாக கிடைக்கும். எனவே பொது, மக்களுக்கு மின் கட்டண செலவு குறையும். 
 
தி.மு.க.வின் 2021 தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட 500+ வாக்குறுதிகளில் 221வது வாக்குறுதியாக 'மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்து பிறகு அது நிறைவேற்ற கால தாமதம் ஆகிவருகிறது.
 
ஒரு மின் இணைப்பின் மின்சார பயன்பாட்டை மாதாந்திரம் அளவீடு செய்ய 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்துவது மின் வாரியத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை களத்திற்கு சென்று பயன்பாட்டை கணக்கீடு செய்யாமல் இதில் உள்ள தொழில்நுட்பத்தால் இருக்கும் இடத்திலேயே எளிதில் மின்வாரிய அதிகாரிகளால் துல்லியமாக கணக்கீடு செய்ய முடியும். 
 
இந்த மீட்டர்களுக்கான சர்வதேச டெண்டர் 2023 ஆகஸ்ட் மாதத்தில் கோரப்பட்டு அதன் பின்னர் வந்த டெண்டர்களில் பிற நிறுவனங்களை விட குறைந்த விலையை ஒரு நிறுவனம் (அதானி எனர்ஜி) கொடுத்தபோதிலும், அது அரசுக்கு அதிக செலவை ஏற்படுத்தும் படி இருந்ததால், அந்த டெண்டர் 28.12.2024 அன்று ரத்து செய்யப்பட்டது.
 
இதற்கு பின்னர் மற்றுமொரு டெண்டர் கோரப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 2025ல் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு, மீண்டும் டெண்டர் கோருவதற்கு மின் வாரியம் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (5.3.25) கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு மீண்டும் டெண்டர் கோரப்பட உள்ளது என்று தெரிவித்தார். 
 
ஆட்சி நிறைவேற இன்னும் 1 ஆண்டு தான் உள்ளதே எப்படி நிறைவேற்ற முடியும் என கேள்வி எழுப்பப்பட்டது. 
 
இதற்கு பதிலளித்த அவர்,
தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த பொருத்த, மாதாந்திர கணக்கீடு நடைமுறைக்கு கொண்டு வரப்படும். அரசு கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றும்படி பணிகள் நடைபெறும் என்று அவர் கூறினார்.
 
கோவை சிட்ரா பகுதியில் தொழில்நுட்ப ஜவுளி தொழில் முனைவோருக்கான 5 நாள் பயிற்சி நிகழ்வை தமிழக கைத்தறித்துறை அமைச்சர் காந்தி மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். அப்போது இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, நூல் விலை உயர்வு மின் கட்டண உயர்வு, தொழிலாளர்கள் கூலி குறைவு போன்ற காரணங்களால் விசைத்தறிக்கூடங்கள் கோவையில் நலிந்து வருகின்றது என்ற கருத்து உள்ளது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் கேட்டதற்கு அவர், விசைத்தறி தொழில்களுக்கு 1000 மின்சார யூனிட்கள் இலவசமாக இந்த அரசு வழங்குகிறது. அதேபோல கைத்தறி தொழிலுக்கும் 300 யூனிட் இலவசமாக வழங்கப்படுகிறது. 
 
எனவே மின்சார கட்டணத்தால் விசைத்தறி தொழிலுக்கு பாதிப்பு இல்லை. விசைத்தறி தொழில் செய்பவர்கள் 70% பேர் 1000 யூனிட்டுக்குள் தான் பயன்படுத்துகின்றனர் என அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.
 
அமைச்சர் காந்தி, ஜவுளி துறைக்கான பிரத்தியேக கொள்கை இன்னும் 1 வாரம் முதல் 10 நாட்களில் வெளிவரும் என கூறினார். மேலும் பருத்தி தொடர்பாக காட்டன் கார்பரேஷன் ஆப் இந்தியா - வின் (CCI) கிடங்கு தமிழகத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

Trending News

Latest News

You May Like