குட் நியூஸ்..! மீனம்பாக்கம் முதல் பரந்தூர் வரை மெட்ரோ ரயில் திட்டம்..!
சென்னையில் இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ., தொலைவுக்கு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இப்பணிகள் அனைத்தையும் வரும் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புறநகர் பகுதிகளை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பணிகள் நடைபெறும் 3 வழித்தடங்களையும் நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒன்றான கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தை பரந்தூர் வரை 43 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து, சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்து, தமிழக அரசிடம் கடந்த ஜன. 3-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த தமிழக அரசு, பூந்தமல்லி – பரந்துார் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து, அடுத்தகட்டமாக, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கடந்த பிப்ரவரியில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மீனம்பாக்கத்திலிருந்து குரோம்பேட்டை, குன்றத்தூர் வழியாக பூவிருந்தவல்லி வரை புதிய மெட்ரோ வழித்தடம் அமைகிறது. புதிய வழித்தடத்துக்காக குன்றத்தூர் மற்றும் திருநீர்மலை ஆகிய 2 இடங்களில் ஆய்வுகள் நடைபெறுகின்றன. மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய வழித்தடம் குறித்த சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தயாரிக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியது.