குட் நியூஸ்..! கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு தேதி அறிவிப்பு..!

சென்னை நகரப்பகுதி, புறநகரப் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு சென்று அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதில், உள்ள குறைபாடு என்னவென்றால் சென்னை நகரப் பகுதி, புறநகரப் பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு அடிக்கடி பேருந்து வசதி இல்லாத காரணமே.
இதனால், முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி விட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்திருக்கலாமே என்ற குறள் எழுந்தது. அதன்படி, தற்போது வரை சென்னையிலிருந்து, கிளாம்பாக்கம் செல்வதற்கும், கிளாம்பாக்கத்திலிருந்து சென்னை பகுதிகளுக்கு வருவதற்கும் முறையான போக்குவரத்து வசதி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
எனவே, கிளாம்பாக்கம் எதிரில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி, தெற்கு ரயில்வே சார்பில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியது.
அதன்படி, வண்டலூர்- கூடுவாஞ்சேரி இடையே கிளாம்பாக்கத்தில் 3 நடைமேடைகளுடன் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், 2 நடைமேடைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், 3-ஆவது நடைமேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில் நிலையத்தில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதனால், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்துக்கு எளிதில் சென்று விடலாம். இது தென்மாவட்ட மக்களுக்கு பெரும் வசதியாக அமைந்துள்ளது.
இதேபோல, ரூ.79 கோடியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் மையப் பகுதியை அடையும் வகையில் சுமார் 400 மீட்டர் தொலைவில் ஆகாய நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) மற்றும் மின் தூக்கி (லிப்ட்) ஆகியவற்றுடன் கூடிய நடை மேம்பாலம் அமைய உள்ளது.
இந்த நிலையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் வரும் 30 நாள்களுக்குள் முடிவடைந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து, ரயில் நிலையத்தில் தற்காலிக பயணசீட்டு வழங்கும் அறை மற்றும் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தும் பணி தொடங்கும் என தெரிகிறது. அதன்படி, வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.