1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமிரா : இந்திய ரயில்வே அதிரடி..!

1

ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை அமைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

முதலில் சோதனை அடிப்படையில் சிசிடிவி கேமிராக்கள் அமைத்து அதில் கிடைத்த நேர்மறையான விளைவுகளைக் கருத்தில் கொண்டு அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவ இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது. குற்றவாளிகள், திட்டமிட்ட குற்றங்களைச் செய்யும் கும்பல்களின் மோசடிச் சம்பவங்கள் கணிசமாகக் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகளின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் கதவுகளுக்கு அருகிலுள்ள பொதுவான இயக்கப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படவிருக்கின்றன.

ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியின் முன்னேற்றத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே இணையமைச்சர் ரவ்னீத் சிங் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஜூலை 12ஆம் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ரயில்வே வாரியத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இது தொடர்பாக வடக்கு ரயில்வேயின் ரயில் இன்ஜின்கள், ரயில் பெட்டிகளில் வெற்றிகரமான சோதனை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 74,000 ரயில் பெட்டிகளிலும் 15,000 லோகோமோடிவ்களிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவ மத்திய ரயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 4 டோம் வகை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நுழைவு வழியிலும் 2 கேமராவும், ஒவ்வொரு ரயில் இன்ஜினிலும் 6 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படவிருக்கின்றன. இதில் ரயில் இன்ஜினின் முன்புறம், பின்புறம் என இருபுறமும் தலா 1 கேமரா பொருத்தப்படவிருக்கிறது. ரயில் இன்ஜினின் ஒவ்வொரு பெட்டியிலும் 1 டோம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவிருக்கின்றன.

சிசிடிவி கேமராக்கள் நவீனமானமாக இருக்கும் என்றும், எஸ்டிக்யூசி சான்றிதழ் பெற்றவையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர், சிறந்த உபகரணங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார். மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ரயில்களிலும், குறைந்த வெளிச்ச நிலைகளிலும் கூட உயர்தர காட்சிப் பதிவுகள் கிடைக்கும் வகையில் கேமராக்களை பொருத்துமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை ஆராயுமாறு மத்திய ரயில்வே அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ரயில் பயணிகள் இருக்கும் பகுதிகளில் கேமராக்களை பொருத்துவதன் நோக்கம் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதே ஆகும். தனியுரிமையைப் பாதுகாக்கும் அதே வேளையில், இந்த கேமராக்கள் குற்றவாளிகளை அடையாளம் காணவும் உதவியாக இருக்கும். இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கல் முயற்சிகள், பாதுகாப்பான பயணத்தையும் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தையும் வழங்குவதற்கான உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும் என்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like