குட் நியூஸ்..! அடுத்த மாதம் முதல் அரசுப் பள்ளி மின்கட்டணத்தை அரசே செலுத்தும்..!

பள்ளிகளுக்கு ஆண்டுக்கு இருமுறை வழங்கப்படும் சில்லறை செலவுகளுக்கான தொகையில் இருந்து மின் கட்டணம் செலுத்துவதற்கான நிதி ஒதுக்கப்படும். ஆனால், சில்லறை செலவினங்களுக்கான நிதி சரிவரிக் கிடைப்பதில்லை எனப் புகார்கள் வந்துள்ளன. சில இடங்களில் தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவிட்டு மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள்
உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை போன்றவை தொடங்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் முன்பைவிடப் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், சில்லறை செலவினங்களுக்கான நிதி இல்லாமல் மின் கட்டணத்தைச் செலுத்துவது தலைமையாசிரியர்களுக்கு பிரச்சினையாக மாறியுள்ளது.
தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் மின் கட்டணத்தை அரசே செலுத்திவிடுவது போல, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மின் கட்டணத்தையும் அரசே நேரடியாக மின்வாரியத்தில் செலுத்திவிட வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது.
அதன்படி, சோதனை அடிப்படையில் தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மின்கட்டணம் நேரடியாக செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் மே 1ஆம் தேதியில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் இந்த முறை அமலுக்கு வரவுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.