1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! விரைவில் ரேஷன் கடைகளை சிறு ஏ.டி.எம்.களாக மாற்ற அரசு திட்டம்..!

1

ரேஷன் கடைகள், இனி சிறு ஏடிஎம்களாகவும் செயல்படவிருக்கின்றன. இது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, மத்திய அரசு இந்த திட்டத்தைக் கொண்டுவந்தாலும், இதற்கான நவீன தொழில்நுட்ப இயந்திரங்களை கொண்டுவருவதில் இருந்த சவால் அதனை செயல்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. தமிழகத்தில் இயங்கும் நியாயவிலைக் கடைகளில், மக்களுக்கு வங்கியிலிருந்து பணம் எடுத்துக்கொடுக்கும் சிறு ஏடிஎம்கள் போல செயல்படுவதற்கான முன்முயற்சிகளை தமிழ்நாடு கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம், ஏடிஎம்கள் மற்றும் வங்கிகளை அணுக முடியாமல் இருக்கும் பாமர மக்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எளிதாக எடுக்க பேருதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. பயோமெட்ரிக் முறையில் இயங்கக்கூடிய டிஜிட்டல் கருவியானது, கோர் பேங்கிங் சேவைகளை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இது அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நிறுவப்பட்டு, அதற்கென ஒரு வங்கி ஊழியர் பணியமர்த்தப்படுவார்.எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால் மின்னணு பாயின்ட்-ஆஃப்-சேல் இயந்திரங்களை வங்கிகளின் இணைய தளங்களுடன் இணைப்பதில் உள்ள சவால்கள் காரணமாக அது அப்போது நடைமுறைக்கு வராமல் போனது. 

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் கூறியதாவது: ஏடிஎம்களாக மாற்றக்கூடிய வசதி இருக்கும் நியாயவிலைக் கடைகளை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகின்றன என்றார். மேலும், சில நியாயவிலைக் கடைகளை மாற்றுவதற்கான கூடுதல் வழிமுறைகளும் ஆராயப்படவிருக்கிறது. இது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறினார்.

பல தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (பிஏசிசிஎஸ்) இதேபோன்ற சேவைகளை வழங்குவதற்காக மாற்றியமைக்கப்பட்டதையும் சுப்பையன் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, தமிழகத்தில் உள்ள 4,500 பிஏசிசிஎஸ் அமைப்புகளில், கிட்டத்தட்ட 3,500 மைக்ரோ ஏடிஎம்களாக செயல்படுகின்றன" என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மைக்ரோ ஏடிஎம்கள் மூலம் ஆயிரம் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம். டெபிட் கார்டுகள் இல்லாத, சமூக ஓய்வூதியத் தொகையை பெறும் முதியவர்களுக்கு தற்போது, வங்கி ஊழியர்கள் மூலம்தான் பணப்பட்டுவாடா நடைபெற்று வருகிறது.

தற்போது தமிழகத்தில் சுமார் 35 லட்சம் முதியவர்கள், முதியவர்களுக்கான ஓய்வூதியமான ஆயிரம் ரூபாயை பெற்று வருகிறார்கள். இவர்களில் 2.7 லட்சம் பயனர்கள், வங்கிக்கு நேரடியாகச் சென்றோ அல்லது அஞ்சலகங்கள் வாயிலாகவோ தான் தங்களது பணத்தைப் பெற்று வருகிறார்கள், இவர்களால் ஏடிஎம்களை பயன்படுத்த முடியாது. இந்த நிலையில், மலைப்பகுதிகளில், இன்டர்நெட் வசதி குறைந்த பகுதிகளில், மக்களின் கைரேகைகளைப் பதிவு செய்து பணம் வழங்குவதில் சிக்கல்கள் உள்ளன. இதனால் முதியவர்கள் பல முறை வங்கிகளுக்கு அலையும் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில்தான், ஏற்கனவே நியாயவிலைக் கடைகளில், தமிழக அரசின் பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணத் தொகைகள் மிக எளிதாக மக்களுக்கு சென்றடைந்ததை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு இந்த புதிய திட்டம் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகையாக முதன் முதலில் ரேஷன் கடைகளில் ரூ.100 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு ரூ.1000, பிறகு அதுவே ரூ.2500 வரை வழங்கப்பட்டது. கடைசியாக வெள்ள நிவாரண நிதியாக ரூ.6000 வரை ரேஷன் கடைகளிலேயே மிக எளிதாக ரோக்கன்கள் விநியோகம் மூலம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like