1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி சாலை விபத்தில் சிக்குவோருக்கு கட்டணமில்லா சிகிச்சை!

1

மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில், சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1.5 லட்சம்வரை பணமில்லா சிகிச்சை வழங்கும் திட்டத்தை வரும் மார்ச் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக இந்தத் திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், அசாம், சண்டிகர், புதுச்சேரி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு வரும் மார்ச் மாதம் முதல் இந்தியா முழுக்க இந்தத் திட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, “கடந்த 2024ம் ஆண்டு மட்டும் சாலை விபத்துகளில் 1.80 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இதில், 30,000 பேர்வரை தலைக்கவசம் அணியாததால் பலியாகியுள்ளனர். மேலும், 18 முதல் 34 வயதுடையோர் 66% பேர் விபத்துகளில் சிக்கியுள்ளனர்.

குறிப்பாகப் பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அருகே முறையான உள்நுழையதல் மற்றும் வெளியேற்றல் பாதைகள் சரியாக இல்லாததன் காரணமாக 10,000 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க மத்திய அரசு புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி சாலைகளில் விபத்து நடந்து 24 மணி நேரத்திற்குள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தால், காயம் அடைந்தவருக்கு 7 நாள்வரை கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துகிறது.

இதன் மூலம், காயமடைந்தவர் ரூ. 1.5 லட்சம்வரை கட்டணம் இல்லாமல் சிகிச்சை பெறலாம். அதேபோல், சாலைகளில் அடையாளம் தெரியாத வாகனங்கள் இடித்து மரணம் ஏற்பட்டால், மரணித்தவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ. 2 லட்சம் வழங்கப்படும். இந்தத் தொகை முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.

அசாம், சண்டிகர், பஞ்சாப், உத்தராகண்ட், புதுச்சேரி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த மார்ச் மாதம் கொண்டுவரப்பட்டு இந்தத் திட்டத்தின் மூலம், மொத்தம் 6,840 பேர் பலனடைந்துள்ளனர்.

எனவே இந்தத் திட்டம் வரும் மார்ச் மாதம் முதல் இந்தியா முழுக்க விரிவுபடுத்தப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது மூலம் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரைக் காக்க முடியும்.

சாலை விபத்துகளைக் குறைக்க இனி புதிய பஸ்கள் மற்றும் டிரக்குகளில் மூன்று அதிநவீன தொழில்நுட்பங்கள் கட்டாயமாக்கப்படும். அதில், ஓட்டுநர்கள் தூங்கினால் உடனடியாக எச்சரிக்கை வழங்கும்.

மேலும், ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் பணிபுரியாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு, ஆதார் அடிப்படையில் புதிய தொழில்நுட்பம் கொண்டு வருவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.


 

Trending News

Latest News

You May Like