1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி 60 வயதை தாண்டியவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை..!

1

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்  அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக 1000 ரூபாய் முக்ய மந்திரி மகிளா சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என அறிவித்தார்.



தேர்தலுக்குப் பிறகு 1000 ரூபாயை 2,100 ரூபாயாக உயர்த்துவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்தார். இந்நிலையில் அடுத்த ஜாக்பாட் அறிவிப்பாக 'சஞ்ஜீவனி' திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்மூலம் டெல்லியில் வசிப்பவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இத்திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சேவைகளைப் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

சிகிச்சைக்கான முழு செலவையும் டெல்லி அரசே ஏற்கும் என்று கெஜ்ரிவால் உறுதியளித்துள்ளார். அடுத்த ஆண்டு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு ‘சஞ்ஜீவனி’ திட்டம் தொடங்கப்படும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்த புதிய திட்டத்தின் கீழ், டெல்லியில் உள்ள மூத்த குடிமக்கள் தலைநகரில் உள்ள எந்தவொரு தனியார் அல்லது பொது மருத்துவமனையிலிருந்தும் இலவச சுகாதார சேவைகளைப் பெறலாம் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

'சஞ்ஜீவனி' திட்டம் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பொருந்தும் என்றும் வருமான அடிப்படையில் கட்டுப்பாடுகள் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய கெஜ்ரிவால், மூத்த குடிமக்களை இத்திட்டத்தில் பதிவு செய்ய ஆம் ஆத்மி கட்சியினர் 2 அல்லது 3 நாட்களில் மக்களின் வீட்டிற்கே செல்வார்கள் என்றும் கூறினார்.

2020 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 70 இடங்களில் 62 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் டெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முயன்று வரும் ஆம் ஆத்மி, அதிரடி வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகிறது. ஆம் ஆத்மி கட்சியும் அதன் தலைவர்களும் பிப்ரவரி 2025 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பெண்கள் மற்றும் முதியோர் வாக்குகளை கவரும் பணியில் இறங்கியுள்ளனர்.

Trending News

Latest News

You May Like