குட் நியூஸ்..! விரைவில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்..!
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படாதது மக்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எதிர்கட்சிகளும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தனர். அந்த வகையில் தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கான மடிக்கணினியை வழங்கும் திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. அதற்கான டெண்டர் தற்போது திறக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ACER, DELL, HP நிறுவனங்கள் பங்கேற்று ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு அரசின் Elcot நிறுவனம் இந்த கொள்முதலை செய்கிறது. இந்த லேப்டாப் கொள்முதலுக்காக தமிழ்நாடு அரசு 2000 கோடி ரூபாயை நிதியை இந்த பட்ஜெட்டில் ஒதுக்கியது. தொழில்நுட்ப ஒப்பந்த புள்ளியில் இந்த நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. ஒப்பந்த புள்ளி இறுதி செய்யப்பட்டு இந்த நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்கப்படும் போது 30 முதல் 45 நாட்களுக்குள் கொள்முதல் செய்யப்படும் என்கிறார்கள்.
இந்த லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டு தற்போது கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு உயர் கல்வித்துறை மூலமாக இலவசமாக விநியோகிக்கப்படும். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.