குட் நியூஸ்..! இனி மருத்துவமனை பெண் ஊழியர்களுக்கு கராத்தே, களரிப்பயிற்சி!
கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவது மாநில அரசின் பொறுப்பு தான் என நீதிமன்றமும் திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்நிலையில்,கொச்சி மருத்துவமனையில் பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அனைத்து பெண் ஊழியர்களுக்கும் தற்காப்பு கலை பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த பயிற்சித் திட்டம் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் கட்டாயமாக்கப்படும். கராத்தே, குங்பூ, களரிச்சண்டை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். இந்த பயிற்சிகள் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு ஆதரவுடன் நடத்தப்படும். தற்காப்புக் கலைப் பயிற்சி அவர்களின் உடல் தற்காப்பு திறன்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் மன வலிமையையும் அதிகரிக்கும். 50,000 பெண்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்காப்புக் கலைப் பயிற்சித் திட்டத்துடன், மருத்துவமனை ஊழியர் அல்லாத பெண்களுக்கும் பாதுகாப்புக் கருவிகள் விநியோகிக்கப்படும். சமூகத்திற்கு மேலும் ஆதரவளிக்கும் வகையில், குழந்தைகள் மற்றும் பெண்கள் நலக் குழுக்கள் உட்பட பல்வேறு அரசு நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு பாலியல் கல்வி வகுப்புகளை மருத்துவமனை நடத்தும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.