குட் நியூஸ்..! தமிழ்நாட்டில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு சலுகை..!

அமைச்சரவை கூட்டத்தின் முக்கிய முடிவுகள் பற்றி ஊடகவியலாளர்களிடம் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. புதிய தொழில் நிறுவனங்களும், ஏற்கனவே தொழிற்சாலைகளை நடத்தி வரும் நிறுவனங்களும் புதிய முதலீடுகளை செய்வதற்காக அரசுக்கு முன்மொழிவுகளை அளித்தன.
அதற்கான அமைப்பு முறைகளான தொகுப்பு சலுகைகளை வழங்குவது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. எட்டு நிறுவனங்கள் தொகுப்பு சலுகைகளை அமைப்பு முறையில் பெறுவதற்கும், தொழிற்சாலை விரிவாக்கப் பணிகளுக்கும் கருத்துரு ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கோவை ஆகிய மாவட்டங்களில் ரூ.7,108 கோடி முதலீடுகளில் 22,536 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டங்களுக்கு தொகுப்பு சலுகைகளை வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகன பாகங்கள், காலணி உற்பத்தி, விண்வெளி, பாதுகாப்பு உபகரணங்கள், கண்ணாடிப் பொருட்கள், ஆராய்ச்சி மேம்பாடு ஆகிய துறைகளில் முதலீடுகள் செய்ய உள்ளனர். ஜனவரியில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அது புரிந்துணர்வு ஒப்பந்தமாக கையெழுத்தாகும்.
மேலும், தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை 2023க்கும் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. கடல் சார் வணிகத்தில் முதலீடுகளை ஈர்க்க பெரிய அளவில் போட்டிகள், மாநிலங்களுக்கு இடையே உள்ளன. தனியார் துறை முதலீடுகளை ஈர்க்கும் அளவில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
கப்பல் மறுசுழற்சி, மிதவை கலங்கள் கட்டுதல், துறைமுக மேம்பாடு, வணிக ரீதியான அனுமதிகள் உள்ளடக்கிய கொள்கை அது. கடல் புறம்போக்கு பகுதிகளை நீண்டகால குத்தகைக்கு விடவும் இந்த கொள்கை வழிவகுக்கும். நீர் சவால் விளையாட்டுகள், பசுமை துறைமுக திட்டங்கள், கடல்சார் வளர்ச்சி ஆகியவை அதில் உள்ளடக்கமாக உள்ளது என்று தங்கம் தென்னரசு கூறினார்.