1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! தமிழகத்தில் கடல் காற்றாலை மின்சார திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

1

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இந்தியாவின் முதல் கடல் காற்றாலை ஆற்றல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து மத்திய அமைச்சரவை மிக முக்கிய முடிவை எடுத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநில கடற்கரையில் தலா 500 மெகாவாட் மின்சாரத்தை தயாரிப்பது என மொத்தமாக 1 ஜிகா வாட் கடல் காற்றாலை திட்டமாக இது இருக்கும். இந்தியாவுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு” என்று பெருமிதமாக தெரிவித்தார்.

இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 3.72 பில்லியன் யூனிட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றும், ஆண்டுக்கு 2.98 மில்லியன் டன் கார்பன் டையாக்சைடு உமிழ்வு குறையும். இந்த திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.7453 கோடி ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இந்தியாவில் கடல்சார் காற்றாலை ஆற்றல் வளர்ச்சியைத் தொடங்குவது மட்டுமல்லாமல், கடல் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளுக்குத் துணையாக நாட்டில் தேவையான சுற்றுச் சூழல் அமைப்பை உருவாக்கவும் வழி வகுக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பேசிய அஷ்வினி வைஷ்னவ், “பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலம் மிகவும் முக்கியமானது, ஏனெனில் அது விவசாயிகளின் நலனுக்கான பல மாற்றங்களை கொண்டு வர முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் செலுத்துகிறது. நெல், ராகி, சோளம் மற்றும் பருத்தி உள்ளிட்ட 14 காரீஃப் பருவ பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.இந்த முடிவால், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ஒரு லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும். இது முந்தைய சீசனைக் காட்டிலும் ரூ.35,000 கோடி அதிகம்” என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like