1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! வரும் 15-ம் தேதி முதல் அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் அமல்..!

1

கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கெனவே காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் காலை உணவுத் திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.600.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 2022 செப்டம்பர் முதல் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலை உணவு திட்டத்தை ஜூலை 15ம் தேதி முதல் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது.

தமிழகத்தில் 1,416 நகர்ப்புறப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் (கிராமப்புறப் பகுதிகள்) பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் 1,416 நகர்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமூகநலத் துறை சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. பொறுப்பேற்க நேரிடும்: இந்நிலையில் சமூகநல ஆணையரகத்திடம் இருந்து மின்னஞ்சல் மூலமாக காலை உணவுத் திட்டம் தொடர்பாக நகர்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் பெறப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் உள்ள நகர்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதில் ஏதேனும் பள்ளிகள் விடுபட்டிருந்தால் அதை குறிப்பிட்டு கையொப்பத்துடன் உடனடியாக அனுப்ப வேண்டும். இந்த விவகாரத்தில் ஏதேனும் பள்ளிகள் விடுபட்டது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரே பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like