குட் நியூஸ்..! விரைவில் ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே படகு சேவை..!

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் கடைக்கோடியான தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து 24.2.1914-ல் தொடங்கப்பட்டது. விடுதலை அடைந்த பின்னரும் போக்குவரத்து தொடர்ந்தது. 22.12.1964-ல் தனுஷ்கோடி புயலில் அழிந்த பிறகு, 1965-ம் ஆண்டிலிருந்து ராமேசுவரம் தலைமன்னார் இடையே ஒரு நாள் விட்டு ஒரு நாள் என வாரத்துக்கு மூன்று நாட்கள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. ராமானுஜம் என்ற பெயரிடப்பட்ட இந்தப் பயணிகள் கப்பலில் அதிகபட்சமாக 400 பேர் வரை பயணம் செய்தனர்.
இந்தக் கப்பல் போக்குவரத்து மூலம் வணிகர்கள் பல்வேறு வகையான பண்டங்களையும் சரக்குகளையும் ராமேஸ்வரத்திலிருந்து கொழும்பு கொண்டு சென்றனர். கொழும்பிலிருந்து எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தமிழகத்துக்கு வாங்கி வந்தனர். இதனால், தென் மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி காணப்பட்டது.
இந்த நிலையில் இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினை போராக மாறியதால் பாதுகாப்பு காரணங்களால் 1981-ம் ஆண்டு கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், தென் மாவட்டங்கள் வணிகரீதியாகப் பின்னடைவைச் சந்தித்தன. இலங்கையில் 2009இல் போர் முடிவுக்கு வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்துத் தொடங்குவது குறித்து இரு நாட்டு அதிகாரிகள் அளவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
21.11.2021-ல் அரசுமுறைப் பயணமாக ராமேஸ்வரம் வந்த இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, இரு நாடுகள் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்காக ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 13-ல் தமிழக சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில் குஜராத்தின் கெவாடியாவில் நடைபெற்ற கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழும கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று பேசினார். அப்போது அவர், தமிழ்நாட்டின் மத்தியில் உள்ள தொழிற்சாலைகளுக்குத் தேவையான சரக்குகளை கையாளக்கூடிய வகையில், கடலூர் பகுதியில் பெருந்திறன் கொண்ட பசுமை வளத் துறைமுகத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை இந்த துறைமுகம் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1981ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்த, இந்தியா & இலங்கை இடையேயான பாரம்பர்ய கடல்வழிகளை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழக அரசு சார்பில் இந்தியா இலங்கை இடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கும் நோக்கில் ராமேஸ்வரம் தலைமன்னார் வழித்தடத்தில் ராமேஸ்வரத்தில் கப்பலணையும் மேடை, பயணிகள் தங்குமிடம், சுங்க மற்றும் குடிமைப் பிரிவு சோதனை மையங்கள் ஆகிய கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கு திட்ட அறிக்கை, மதிப்பீடுகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒப்புதல் கிடைத்தால் இரு நாடுகள் இடையே கப்பல் போக்குவரத்துத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.