குட் நியூஸ்..! பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல்..!
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று (செப்டம்பர் 18) துவங்கியது. இந்த கூட்டத்தொடரானது செப்டம்பர் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணங்கள், சாதனைகள் குறித்து பிரதமர் மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினார்கள். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் விவாகரத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் நாடு முழுவதும் பெண்களின் வாக்குகளை கவர்வதற்கும் பெண்கள் மத்தியில் பிரதமர் மோடியின் இமேஜை உயர்த்துவதற்கும் பாஜக திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
முன்னதாக நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதவை நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியா கூட்டணி சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்தநிலையில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருப்பதற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு அரசியலமைப்பு சட்டத்தின் 81வது பிரிவில் திருத்தத்தை கொண்டு வந்து நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மூன்றில் ஒரு பங்கு இடம், பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று முதல் முறையாக மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தது.
ஆனால் போதிய ஆதரவு இல்லாததால் இந்த மசோதா தோல்வியடைந்தது. இதனையடுத்து இரண்டு முறை என 90களில் மொத்தம் 3 முறை இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் தோல்வியடைந்தது. இதனையடுத்து இதே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடந்த 2010ம் ஆண்டு மீண்டும் இந்த மசோதாவை தாக்கல் செய்தது. மாநிலங்களவையில் இது நிறைவேற்றப்பட்ட நிலையில் மக்களவையில் தோல்வியடைந்தது.
சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் அப்போது இந்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் தோல்வியடைந்தது. இதனையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ், இடதுசாரிகள், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தின. இந்த சூழலில் தற்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.