1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மீண்டும் பயனாளிகள் இணைப்பு..!

1

பெண்களின் உழைப்பை அங்கீகரிக்க வேண்டும், பொருளாதாரத் தேவைகளுக்கு அவர்கள் யாரையும் சார்ந்திருக்க கூடாது என்பதற்காகவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாடு அரசு தான் இந்த திட்டத்தை அறிவித்தது. தமிழகத்தை பின் தொடர்ந்து கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசுகள் இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளர்களாக இணைக்கப்பட்டுள்ள பெண்களின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் ஒரு கோடி பயனாளர்கள் என்று வரையறுக்கப்பட்டாலும் பொருளாதாரத் தகுதிகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் அத்தனை பேருக்கும் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதனால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலில் ஒரு கோடியே 6 லட்சத்து 52ஆயிரமாக இருந்த பயனாளர்கள் எண்ணிக்கை தற்போது சுமார் ஒரு கோடியே 16 லட்சமாக உயர்ந்துள்ளது. மீண்டும் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய ஒரு கோடியே 55 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மீதமுள்ளவர்களுக்கும் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்து கிடைக்காதவர்களை கணக்கெடுக்கும் பணிகள் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் உத்தரவு பேரில் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like