1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! மதியம் முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி..!

1

தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கோடை மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பல்வேறு பகுதிகளில் நேற்றும் மழை நீடித்தது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணை, தென்காசியில் தலா 18 மி.மீ., கடனாநதி அணையில் 17 மி.மீ., ஆய்க்குடியில் 14 மி.மீ., ராமநதி அணையில் 10 மி.மீ., குண்டாறு அணையில் 6.20 மி.மீ., கருப்பாநதி அணையில் 5.50 மி.மீ., செங்கோட்டை, சங்கரன்கோவிலில் தலா 4 மி.மீ., சிவகிரியில் 3 மி.மீ. மழை பதிவானது.

கடந்த 17-ம் தேதி மலைப்பகுதியில் பெய்த மழையால் பழைய குற்றாலம் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின் (17) உயிரிழந்தார். இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோ உத்தரவிட்டார்.

இந்நிலையில், வியாழக்கிழமை ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் ஐந்தருவி, சிற்றருவி, புலியருவியில் குளிக்க தடை உடனடியாக நீக்கப்படுவதாகவும், பழைய குற்றாலம் அருவியில் வெள்ளிக்கிழமை முதல் காலை காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும் என்றும், நேற்று மாலை 4 மணி முதல் குற்றாலம் பிரதான அருவியிலும் குளிக்க அனுமதிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். ஐந்தருவியில் தடை நீக்கப்பட்டாலும் வியாழக்கிழமை மாலையில் நீர் வரத்து அதிகரித்ததால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது.

ஒரு வார தடைக்கு பின்னர் வெள்ளிக்கிழமை காலையில் பழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்தனர். ஆனால் மீண்டும் மழை பெய்து, நீர் வரத்து அதிகரித்ததால் சில மணி நேரங்களில் பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது. நீர் வரத்தைக் கண்காணித்து சூழ்நிலைக்கு தகுந்தவாறு குளிக்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிற்றருவி, புலியருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துச் சென்றனர்.

இந்நிலையில், இன்று காலையில் மலைப்பகுதியில் மழை குறைந்ததால் ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் வரத்து குறைந்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அதேநேரம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அந்த அருவிகளில் குளிப்பதற்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

2 அருவிகளிலும் இன்று பிற்பகலில் தண்ணீர் வரத்து குறையும்பட்சத்தில் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like