குட் நியூஸ்..! 66 நகரங்களில் இருந்து 66 ரயில்கள் அயோத்திக்கு பயணிக்க உள்ளன..!
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் ராமர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்புவர். குறிப்பாக தமிழகத்தை சொல்லலாம். இங்கிருந்து ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் திட்டமிட்டுள்ளனர். அயோத்தி சென்று விட்டு அப்படியே காசிக்கும் சென்று வழிபடலாம். இரண்டு நகரங்களுக்கும் இடையிலான தொலைவு என்பது 219 கிலோமீட்டர் தூரம் தான்.
எனவே ஒரே பயணத்தில் முக்கியமான வட இந்திய ஆன்மீகத் தலங்களை தரிசித்து விடலாம். இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் வசதிக்காக ஆஸ்தா சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
66 நகரங்களில் இருந்து 66 ரயில்கள் அயோத்திக்கு பயணிக்க உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களில் இருந்து அயோத்திக்கு இயக்கப்படுகின்றன. டெல்லியை பொறுத்தவரை நியூ டெல்லி, பழைய டெல்லி, நிஜாமுதீன், ஆனந்த் விகார் ஆகிய நான்கு ரயில் நிலையங்களில் இருந்து ஆஸ்தா சிறப்பு ரயில்கள் புறப்படுகின்றன.
மேலும் அகர்தலா, தின்சுகியா, பார்மெர், கத்ரா, ஜம்மு, நாசிக், டேராடூன், பத்ராக், குர்தா ரோடு, கோட்டயம், செகந்திராபாத், ஹைதராபாத், காஸிபேட் ஆகிய நகரங்களில் இருந்து ஆஸ்தா சிறப்பு ரயில்கள் அயோத்தி நகருக்கு இயக்கப்படவுள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர், புனே, மும்பை, வர்தா, ஜால்னா, நாசி உள்ளிட்ட 7 ரயில் நிலையங்களில் இருந்து ஆஸ்தா சிறப்பு ரயில்கள் புறப்படுகின்றன.