குட் நியூஸ்..! 15 நிறுவனங்களுக்கு ஒப்புதல்..24,700 பேருக்கு வேலை..!
உலக முதலீட்டாளர் மாநாட்டின்போது பல்வேறு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்த நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்தில் தொழில்களுக்கு முதலீட்டு அனுமதி அளிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கூட்டம் முடிந்த பின்னர் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள்குறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் விளக்கமாகக் கூறினார்.
அப்போது அவர் கூறியதாவது;
அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.44,125 கோடி முதலீட்டுக்காக 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த முதலீடுகள்மூலம் 24,700 நபர்களுக்குப் புதியதாக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
தூத்துக்குடியில் செம்பா நிறுவனத்துக்கு முதலீடாக ரூ. 21,340 கோடி திட்டம், காஞ்சிபுரத்தில் ரூ. 2600 கோடி முதலீட்டில் 2800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய திட்டம் என 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டு உள்ளது.
வரும் 17ம் தேதி நாட்டிலேயே முதல் முறையாக ஸ்ரீபெரும்புதூர் வல்லம்படுகையில் ரூ.206கோடியில் 18,000 தொழிலாளர்களுக்குப் படுக்கை வசதியுடன் கூடிய தங்கும் இடக் கட்டிடம் திறக்கப்படுகிறது. பசுமை எரிசக்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என்று கூறினார். முதல்வர் ஸ்டாலின் வெகுவிரைவில் வெளிநாடு பயணம் செல்ல உள்ளதால் இந்தக் கூட்டம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.