குட் நியூஸ்..! கல்வியாண்டின் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை..!

ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் அந்த ஆண்டுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிடும். அதாவது அந்த ஆண்டில் எவ்வளவு நாள் வேலை நாட்கள்?, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு இறுதி தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? என்பது போன்ற தகவல்கள் இடம்பெற்று இருக்கும்.
அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான (2025-26) நாட்காட்டியை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. அதில் மொத்தம் 210 வேலை நாட்களாக சொல்லப்பட்டு இருக்கிறது. கல்வியாண்டின் இறுதி வேலை நாள் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் 24- ந் தேதி ஆகும்.தேர்வுகளை பொறுத்தவரையில், முதல் இடை பருவத் தேர்வு ஜூலை 16-ம் தேதி தொடங்க உள்ளது. காலாண்டு தேர்வு செப்டம்பர் 18-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரையில் நடக்கிறது. காலாண்டு விடுமுறை 9 நாட்கள் விடப்பட்டு அக்டோபர் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் அரையாண்டு தேர்வு டிசம்பர் 15 முதல் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரையாண்டு விடுமுறை 12 நாட்கள் விடப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கி 24-ம் தேதியுடன் முடிவடைந்து அதற்கு மறுநாளில் இருந்து கோடை விடுமுறை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தவிர தீபாவளிக்கு 3 நாட்கள், பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள், கல்வியாண்டின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.வழக்கமாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வு எப்போது தொடங்கும் என்ற தகவலும் கால அட்டவணையில் இடம்பெறும்.
கடந்த ஆண்டில் இதுகுறித்து தெரிவிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டும் அதுகுறித்து எந்த தகவலும் இல்லை. பள்ளிகள் இந்த மாதிரி கல்வி அட்டவணையை பயன்படுத்தி பள்ளிகளுக்கு ஏற்றவாறு கால அட்டவணையை தயாரித்து கொள்ளலாம் என்றும், கால அட்டவணை குறித்த கருத்துகள் ஆலோசனைகளை msectndse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.